மலேசியாவில் இந்து சமயம் 1.௦ முன்னுரை மலேசியா நாட்டில் வாழும் இந்தியர்களில் 80% இந்து சமயத்தவர். மலேசியாவின் மற்ற இனத்தவர் மலேசியா இந்தியர்களை அடையாளப்படுத்துவதற்காக அவர்களை இந்தியர்கள் அல்லது இந்துக்கள் என்றே கூறுவர். ஆகவே, இந்து சமயம் மலேசியா இந்தியர்களின் முக்கிய அடையாளமாக விளங்குகின்றது எனலாம். மற்ற ௨௦% இந்தியர்களின் இஸ்லாம், கிறிஸ்துவம், பஹாய் போன்ற பிற சமயங்களைப் பின்பற்றுபவர்களாக உள்ளனர். இந்திய நாட்டிற்கும், மலாய் நாட்டிற்கும் நீண்ட பண்பாட்டுப் பாரம்பரியத் தொடர்பு உண்டு.ஆயினும் பிரிட்டீசாரின் காலத்தில் மலேசியாவிற்கு கொண்டுவரப்பட்ட தென்னிந்தியர்களின் பாரம்பரியத்திலான இந்து சமயமே தற்போது மலேசியா நாட்டில் நடைமுறையில் உள்ளது. ஆனால் இவர்களுள் மலாக்காச் செட்டிகள் விதிவிலக்கு. இவர்கள் கடைபிடிக்கும் இந்து சமய முறையானது மலாக்கா சுல்தான்கள் காலத்தில் (14 ஆம் நூற்றாண்டு) இருந்து அனுசரிக்கப்பட்டு வருகின்றது. மலேசிய இந்துக்களின் சமய வழிபாட்டைச் சைவம், வைணவம் என இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். இதனைத் தவிர்த்து மலேசியா இந்துக்கள் பாரம்பரிய வழிபாட்டு முறைகளையும் கடைபிடிக்கின்றனர். மேலும் சமயப் பெரியோர்கள் தோற்றுவித்த மார்க்கங்கள், யோகத் தியான வழிப்பாட்டு முறைகள், தத்துவ போதனை மார்கங்கள், உலகளாவிய நிலை சமய அமைப்புகள் போன்றவற்றின் நெறிகளையும் மலேசியா இந்துக்களுள் ஒரு பிரிவினர் பின்பற்றுகின்றனர். 2.௦ : இந்து மதம் இந்து மதம் என்பது இந்திய மக்களின் மிக உயர்ந்த ஆன்மிக சிந்தனையாகவும், உயரிய பண்பாடாகவும் அவர்களின் தனிப்பெரும் சொத்தாகவும் விளங்குகின்றது. இது இவர்களின் வாழ்வியல் அடையாளம் என்பதே சாலப் பொருந்தும். ‘இந்து என்பது இம்மதத்தின் தொடக்க காலப் பெயர் அல்ல. தொடக்க காலத்தில் இந்திய மக்கள் இந்து மதத்தைக் குறிப்பதற்க்கு இத்தகைய பெயர்களைப் பயன்படுத்தியுள்ளனர். எடுத்துக்காட்டிற்கு சகாதன தர்மம்- நீடித்த அருளியல் சிந்தனைக் கோட்பாடுகள், வைதீக தர்மம்- வேதத்திற்குக் கட்டுப்பட்ட சமயம், மற்றும் பிரம்மனிஸம்- இறைவனின் சமயம். பல இனம் மற்றும் மதங்களைப் பின்பற்றும் மலேசிய மக்களிடையே பிற மதத்தை மதிக்க வேண்டும் எனும் பண்பு மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. இந்து சமயத்தைப் பின்பற்றுபவர் பிற மதத்தை இழிவு படுத்துவதோ, தூற்றிப் பேசுவதையோ நிச்சயமாகச் செய்யக் கூடாது என நந்திநாத சூத்திரம்(232) வலியுறுத்துகிறது. மேலும் தான் விரும்பும் நெறியைக் கடைபிடிக்கத் தனி மனிதனுக்கு எல்லா உரிமையும் உள்ளது எனும் கொள்கையின் அடிப்படையில் எல்லா மதங்களும் மரியாதைக்கு உரியவைதான் என்றும் இச்சூத்திரம் விளக்குகிறது. இந்து மதம் புனித நூல்கள் மற்றம் பாரம்பரியம் வழி வந்த நெறிகளையும் வழிப்பாட்டினையும் இணைத்த ஒன்றாகவே இன்றளவும் உள்ளது. இதில் புனித நூல்கள் என்பது வேகத்தையும் ஆகமத்தையும் மற்ற பிற சமய இலக்கிய இலக்கணங்களையும் அடிப்படையாகக் கொண்டது. மற்றொன்று மக்களின் பாரம்பரிய நம்பிக்கைகளின் அடிப்படையில் கடைபிடிக்கப்படும் நெறியாகும். மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் தோன்றிய நெறியாகும். மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் தோன்றிய நெறியானது ஓரளவு ஆகமத்தையும் மக்களின் தொன்றுதொட்ட வழக்கத்தின் அடிப்படையிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால்,வேகத்தை அடிப்படையாகக் கொண்ட நெறியானது முழுக்க முழுக்க வேத ஆகமங்களையும் சாத்திரங்களையும் அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும் வழிபாடாகப் போற்றப்படுகிறது. 3.௦ : இந்து சமயப் பிரிவுகள் 3.1 : காணாபத்தியம் கணாபத்தியம் என்பது விநாயகரை முழுமுதற் கடவுளாக வழிபடும் இந்து சமயப் பிரிவாகும். இந்து சமயத்தில் விநாயகரை வழிபடுதல் என்பது ஏனைய பிரிவுகளிலும் காணப்படும் நடைமுறையாகும். அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்த இந்துக்களும், வழிபாடுகள், பணிகள் மற்றும் சமய நிகழ்வுகள் ஆகியவற்றை ஆரம்பிக்கும் முன்னர் விநாயகரை வழிபடுவர். கணபதி வழிபாடு, சைவ சமயத்தின் ஒரு பகுதியாக கிட்டத்தட்ட ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து காணப்படுகிறது. காணாபத்தியப் பிரிவு பெரும்பாலும் ஆறாம் நூற்றாண்டுக்கும் ஒன்பதாம் நூற்றாண்டுக்கும் இடையில் தோற்றம் பெற்றிருக்கலாம். இதன்போது விநாயகருக்காக கோயில்களும் கட்டப்பட்டன. இப்பிரிவில் விநாயகரே முழுமுதற் கடவுளாக வழிபடப்பட்டார். இவர் வழிபாட்டில் அருகம்புல் முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. மோதகமும், கொழுக்கட்டையும் இவருக்கு விருப்பமான படையல்கள். மூஷிகம் எனும் எலி இவரின் வாகனம். விநாயகர் சதுர்த்தித் திருவிழா விநாயகப் பெருமானுக்கான மிக முக்கியமான விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இவருக்கான வழிபாட்டு முறைகளும் வித்தியாசமானதாகவே உள்ளன. மும்முறைத் தலையில் குட்டிக் கொண்டு தோப்புக்கரணம் போடுவது, தேங்காய் உடைத்தல் போன்ற முறைகளும் இவருக்கே உரியன. விநாயகர் வழிபாடானது மிகவும் எளிய வழிபாடு. மற்ற தெய்வ மூர்த்தங்களை சிற்ப சாத்திர முறைப்படி செய்து அதனை ஆகம முறைப்படி பிரதிஷ்டை செய்ய வேண்டும். ஆனால், விநாயகர் வழிபாட்டுக்கு அது கிடையாது. மஞ்சள், சாணம், மண் என எதைப் பிடித்து வைத்து அதில் அருகம்புல்லை வைத்தாலும் அங்கு கணபதி வந்து அமர்ந்து தனக்கான பூசையை ஏற்றுக் கொண்டு விடுவார். 3.2 : சாக்தம் சாக்தம் சக்தியாகிய அன்னையின் வழிபாட்டைக் குறிக்கும். இந்து சமயத்தில் இறைவனைத் தந்தையாக, தலைவனாக, தோழனாக, தனயனமாக என்று பல வழிகளில் அடியார்கள் அன்பு பாராட்டினாலும் இவற்றில் தலைசிறந்ததும், அந்நியோன்மானதுமான அன்பு முறை தாய்-பிள்ளையாகும். இறைவனைத் தாயாகக் காணும் வழிபாடு சக்தி வழிபாடாகும். பிள்ளையானவன் நன்றே செய்திகும், தீதே செய்திடினும் மாறாத தாய் அன்புக்கு ஒப்பானது தெய்வத்தின் அன்பு, கூடவே தாயின் தன்மையுடைய தெய்வத்தை வழிபடுவது யாருக்கும் எளிதாகிறது. சிவம் என்பது மெய்ப்பொருள். பிரியாது இதனிடத்திலிருந்து நிலைத்துள்ள தொடர்புக்கு சக்தி என்று பெயர்.சிவத்தினின்று சக்தியைப் பிரிக்க முடியாது. உலகம் யாவும் சிவசக்திமயமானது. சக்தி பல்வேறு தொழில்களைப் புரியவும் பல்வேறு தத்துவங்களை விளக்கவும் பல்வேறு வடிவங்களை எடுக்கிறாள். முத்தொழில்களை செய்யும் போது பிரம்மாணி,வைஷ்ணவி,உருத்ராணி என்று பெயர் பெறுகிறாள். சிவத்திற்கு ஒப்பிடும்போது துர்க்கை என்றும்,தீமையை அழிக்கும்போது காளியுமாகிறாள். வித்தை- கல்வியின் வடிவெடுக்கும் போது சரஸ்வதி என்றும், தனதானிய-செல்வம் என்று வடிவெடுக்கும் போது இலக்குமியாகவும் பெயர் பெறுகிறாள். வாழ்வு சிறப்புற ட்சியானது சிறப்புற்றிருக்க வேண்டும் என்பதை துர்க்கையும், செல்வத்தை வழங்க திருமகளும்,கலை ஞானங்களைப் பெற சரஸ்வதியும், ஞானத்துக்கும் நல்லறிவிற்கும் அறிகுறியாக விநாயகரும், வாழ்வை ற்றல் படைத்தாக்க முருகனும் விளங்குகின்றனர். அவதாரபுருஷர்களாக,சித்தர்களாக தோன்றியவர்கள் கூட சக்தியை வணங்கி வந்தனர். இராமபிரான் இலங்கை போகும் முன்பு துர்க்கை பூஜை செய்த்தாகவும், கண்ணன் காத்யாயினி பூஜை செய்தாகவும், சங்கராச்சியார் சாரதா பூஜை செய்ததாகவும், இராமகிருஷ்ணர் காளியை வணங்கியதாகவும் நாம் அறிந்த செய்தியாகும். ஜகதம்பா உணவு அளிக்கும் அன்ன பூரணியாகவும், அனைத்துக்கும் அரசியான இராஜராஜேஸ்வரி[பவானி] இயற்கையின் உயிரை உண்டு தோற்றுவிப்பவளாகவும், மகாசக்தி, பேராற்றல் மிக்கவள் என பல பெயர்களால் அழைக்கப்படுகிறாள். வீரம்,செல்வம்,கல்வி அருள் வேண்டி சக்தியை நோக்கி நோற்கப்படும் நவராத்திரி விழா நம்மவர்களால் பயபக்தியுடன் கொண்டாப்படுகிறது. இதுவே சக்தியின் சிறப்பை உலகெங்கும் பறை சாற்றுகிறது. இது மட்டுமன்றி கெளரி விரதம், வரலெட்சுமி விரதம் போன்ற சக்தியை நோக்கி நோற்கப்படும் விரதங்களாகும். சக்தி வழிபாட்டை நோக்கினால், இது ஆதிகாலந்தொட்டே மக்களிடையே இருந்து வந்துள்ளமைக்கு தராங்கள் நிறைய உண்டு. சிவ வழிபாட்டைப்போன்று சிந்துவெளி நாகரீக மக்களின் சமய வாழ்வில் சக்தி வழிபாடும் சிறப்பிடம் பெற்றிருந்தது. மலேசியாவைப் பொருத்த மட்டில் இங்குச் சக்தி வழிபாடானது பெரும்பாலும் மாரியம்மன் வழிபாடாகவே நிலவி வருகின்றது. 3.3: கௌமாரம் முருகனை முழுமுதற் கடவுளாக வணங்கும் சமயம் கௌமாரமாகும். குமாரனாகிய முருகனே கடவுள். பேரின்ப வடிவினமாக அவனை வழிபட வேண்டும் என்ற சமயக் கோட்பாட்டை உடையது. ஆதிசங்கரர் உருவாக்கிய ஷண்மதங்களில் இதுவும் ஒன்றும். முருகப்பெருமான் சிவபெருமானின் பிரிதொரு திருத்தோற்றம் தான், அவன் கை சக்தியின் அம்சம். ஆகவே, முருகப் பெருமான் சிவசக்தியின் சங்கமரூபம் ஆகும். தேவயானை, வள்ளி ஆகியோர் முருகனின் சக்திகளாவர். இவரின் வாகனம் மயில். மலேசியா முருகன் கோயில்களுள் பத்துமலை திருத்தலம் உலகப் புகழ் உடையது. பினாங்கு தன்னிர்மளைத் திருக்கோயில் மற்றும் ஈப்போ கல்லுமலை ஆலயம் போன்றவை முக்கியமனே முருகன் திருக்கொயில்களாகும். முக்கு காவடி நேர்த்திக் கடன் செலுத்தும் முறையானது முருக வழிபாட்டின் மூலம் தொடங்கியது என்பர். முருகப்பெருமானின் திருவிழாக்களில் தைபூசம், வைகாசி விஷாகம் , திருக்கார்த்திகைத் தீபம், கந்தசஷ்டி ஆகியனே மிக முக்கியமானதாகும். 3.4 : சௌரம் சூரியனை முழுமுதற் வழிபடு கடவுளாகக் கொள்வது சௌர சமயமாகும். பேரொளி வடிவினமாக அவனை வழிபட வேண்டும் என்று கூறுவது இச்சமய கருத்தாகும். சிலர் நான்முகனான பிரம்மனை வழிபடுவது சௌரம் என்றும் கூருகின்றனை. காரணம் சௌரம் என்றால் நான்கு என ஒரு பொருள் உண்டு. அனால் சௌரம் என்பது சூரியனைக் குறிக்கும். ஏனெனில் பஞ்சாங்களில் சூரியனின் சஞ்சாரத்தை வைத்துக் கணக்கிடுவதை சௌரமானம் என்றும் சந்திரனின் நிலையை வைத்துக் கணக்கிடுவதை சாந்திரமானம் என்று கூறுவார்கள். நா.கதிரை வேற்பிள்ளை தமிழ் மொழி அகராதியிலும் சௌரம் என்ற வார்த்தைக்கு சூரியன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சூரிய வழிபாடானது தமிழரின், குறிப்பாக உழவுத் தொழில் ஆற்றும் விவசாயிகளின் தொன்றுதொட்ட வழிபாடாகும் .அதனால்தான், இன்றும் தை மாதம் முதல்நாள் சூரியப் பொங்கல் கொண்டாடப்படுகின்றது. சூரிய பகவான் நவக்கிரகங்களில் நடுநாயகமானவர். அதனால்தான் எல்லா கோயில்களிலும் அமையப்பெற்றுள்ள நவக்கிரக சந்திதானங்களில் சூரிய பகவானை நடுவில் பிரதிஷ்டை செய்துள்ளனர். இவர் எழு குதிரைகள் பூட்டிய ஒன்றைச் சக்கரத்தேரில் பூஷன் எனும் சாரதியால் செலுத்தப்பட்டு பவனி வருபவர். 3.5: சைவ சமயம் சைவ சமயம் சிவபெருமானை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சமயம். சிவம் என்பதற்கு செம்மை, மங்கலம், நன்மை, இன்பம என்ற பொருள்களும் உள்ளன. இறைவன் இதில் முதன்மை பொருளாகக் கூறப்படுகின்றான். சைவ சித்தாந்தம் இறைவனப் ‘பதி’ எனக் குறிப்பிடுகின்றது. பதி என்பதற்கு எல்லா பிரபஞ்சத்திற்கும், உயிர்களுக்கும் தலைவனானவன் எனப் பொருள்படும். பிறப்பு இறப்பு அற்றவன். இறைவன் உயிர்களுடன் ‘ஒன்றாய், ‘உடனாய்’, ‘வேறாய்’ இருக்கிறான் என்கிறது சைவ சித்தாந்தம். இரண்டாவது பொருளுண்மையாகக் கூறப்படும் சீவன் அல்லது ஆத்மாவானது ‘பசு’ எனக் குறிப்பிடப்படுகிறது. மூன்றாவது உண்மைப்பொருள் ‘பாசம்’ எனும் சொல்லால் குறிக்கப்பெறுகின்றது. இதுவும் பதி மற்றும் பாசத்தைப் போல அனாதியே. பாசமானது ஆணவம், கன்மம், மாயை எனும் மூன்று தளைகளை உள்ளடக்கியது. இம்மூன்று தளைகளும் பசுவான சீவன் பதியாகிய இறைவனை உணர்ந்து கொள்ள ஒட்டாமல் தடுக்கின்றன. இந்த மூவகை பாசமும் நீங்கினால் ஆன்மாவானது இறைவனை உணர்ந்து கொள்கிறது. திருநீறும், உருத்திராட்சமும் சைவ சமயச் சின்னங்களாகும். பொதுவாக எல்லா சிவ ஆலயங்களிலும் கருவறை மூர்த்தம் லிங்க வடிவிலேயே அமையப் பெற்றிருக்கும். எல்லா சிவ ஆலயங்களிலும் தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தி வடிவம் கருவறை லிங்க மூர்த்தியின் வலப்பக்கம் தெற்கு நோக்கிப் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். இன்றும் மலேசியாவில் உள்ள சிவ ஆலயங்களில் சிவ வழிபாட்டில் சிவராத்திரி, ஆருத்திரா தரிசனம், திருக்கார்த்திகைத் தீபம் ஆகிய திருவிழாக்கள் மட்டுமின்றி பிரதோஷ நாளும் சிறப்பாகச் செய்யப்படுகின்றது. 4.0 : சித்தர் மரபு தமிழர் மரபில் சித்தர் நெறி என்பது மிகத் தொன்மையான நெறியாகும். மனித பிறப்பு, அதன் இரகசியம், வாழ்வின் நோக்கம், இயற்க்கைத் தத்துவம் என எண்ணிலடங்காத விஷயங்களைத் தன்னகத்தே கொண்டது இந்நெறி. சித்தர் என்பார் சித்தத்தைத் தம் வசப்படுத்தியவர். யோகத்தாலும் தவத்தாலும் பெறுதற்கரிய ஆற்றல்களாகிய என்சித்திகளைப் பெற்றவர்கள். சித்து என்பது ‘அறிவு’ எனப் பொருள் தரும். ஆகவே, முக்காலமும் அறியும் ஞானமும் மரணமில்லாப் பெருவாழ்வும் அடையப் பெற்றவர்கள். இவர்கள் மரணத்தை வென்றவர்கள், மனித குலம் உண்மை உணர்ந்து உயரிய ஆன்மிக அறிவைப் பேற வேண்டி அரிய பெரிய கருத்துகளை முன்வைத்தவர்கள், சாதி பேத சிந்தனைகளுக்கு உடன்படாதவர்கள். மனித நேயம் அவர்களின் உயிர் மூச்சாக இருந்திருக்கின்றது. மலேசியாவில் சித்தர் நெறி 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் சித்த வைத்தியத்தின் மூலமாக அறிமுகம் கண்டதாக ஆய்வுகளின் வழி தெரிய வருகின்றது. பின்னர், நாடி சோதிடம் இந்நெறியை மலேசிய மக்களிடையே புகழ் பெறச் செய்தது.இப்பழக்கம் 7௦ களில் தொடங்கி 80-களில் வலுப்பெற்றதது. நாடி ஜோதிடர் ஓலையில் எழுதப்பட்டிருக்கும் வாக்கியங்களை சித்தர்களின் அருள் வாக்காகவே வாசிப்பார். இது சித்தர்களே நேரடியாக வந்து பேசுவது போல அமையப் பெற்றிருக்கும். இதனால் ஓலைச்சுவடிகளின் வழி சித்தர்கள், நாடி பார்க்க வருபவர்களிடம் நேரடியாக பேசி சிக்கல்களை அறிந்து தீர்ப்பது போன்ற உணர்வார்ந்த உண்மையால் சித்தர்நெறி மக்களின் மனங்களைக் கவர்ந்தன. இதன் அடிப்படையில் மலேசியாவில் பல சித்தர் நெறி இயக்கங்கள் அகத்தியர் திருப்பெயரையும் பல சித்தர்களின் திருநாமத்தையும் முன்னிருந்தித் தோற்றம் கண்டன. இதனால் மலேசியாவிலும் சித்தர் நெறி ஆர்வாளர்கள் பெருகத் தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. 5.௦ : இந்து சமயப் பண்டிகைகள் மலேசியா இந்துக்களைப் பொருத்த மட்டில் தீபாவளி, தைபூசம், பொங்கள், ஆகிய மூன்று பண்டிகைகளும் மிக முக்கியமானதாகவும் மிகப் புகழ்பெற்றும் கொண்டடப்படுகின்றன. மேலும், மலேசிய நாட்டைப் பொருத்த மட்டில் இம்முன்று பண்டிகைகளும் மலேசிய இந்தியர்களின் அடையாளமாகவும் பார்க்கப்படுகின்றன. இந்து சமயத்தில் பண்டிகை என்பது சமய அடிப்படையில் மட்டுமின்றி, சகோதரத்துவத்தையும், நல்லுறவையும் மேம்படுத்திக் கொள்ளும் வழித்துறையாகவும் உள்ளது. 5.1 : தீபாவளி பண்டிகை தீபாவளி பண்டிகை மலேசியா இந்தியர்களிடையே ஒரு புகழ்பெற்ற பண்டிகையாகும். தீபாவளி என்பது இரு சொற்களின் சேர்க்கையில் உருவான ஒரு சொல்லாகும். இதனைத் ‘தீபம்”, ‘ஆவளி’ எனப் பிரிக்க வேண்டும். ‘தீபம்’ என்பது விளக்கினையும் ‘ஆவளி’ என்பது வரிசையையும் குறிக்கின்றது. ஆகவே, தீபாவளி என்பது தீபங்களின் வரிசை எனப் பொருள்படுகின்றது. இதன் அடிப்படையில் தீபாவளிப் பண்டிகையானது சோதி வடிவான இறைவன் ஆன்மாக்களின் அஞ்ஞான இருளை அகற்றி மெய்ஞான தீபமாக அருள்கின்றான் எனும் தத்துவத்தை உணர்த்துகின்றது. ஆகவே, இப்பண்டிகையின் போது மது அருந்துதல் உட்பட எந்தப் பாவ காரியத்தையும் செய்தல் கூடாது. இதுவே வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும் என்பது சமயம் காட்டும் வழியாகும். தீபாவளிப் பண்டிகை ஐப்பசி மாதம், அமாவசை திதியில் கொண்டாடப்படுகின்றது. முறுக்கு, பலவகையான பலகாரம் செய்தல், வீடுகள் தூய்மைப்படுத்துதல், தீபாவளியன்று புத்தாடைகள் வழங்குதல், அஞ்சல் வழியாக வாழ்த்து அட்டை அனுப்புதல் போன்றவை தீபாவளியன்று இன்றும் மலேசியா மக்களிடேயே கொண்டாடப்படுகின்றது. ஆனால், இன்றைய காலத்தில் மலேசியா இந்துக்களிடையே குறுஞ்செய்திகள் வாயிலாகவும் மின்னஞ்சல் வாயிலாகவும் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வழக்கம் மிகப் பிரபலமாகி வந்துள்ளது. தீபாவளி பண்டிகை நாளில் உற்றார் உறவினர், நண்பர்கள் ஆகியோரின் இல்லங்களுக்குச் செல்வதும், அவர்கள் நம் வீட்டிற்கு வருகை புரிவதும்; பெற்றோர்களும் பெரியவர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு பண அன்பளிப்பு கொடுப்பதும்; பட்டாசு, மத்தாப்பு, வானவேடிகள் விளையாடுவதும் சிறப்பு அம்சங்களாகும். மலேசிய நாட்டில் உள்ள மற்ற இனத்தவர்களும் தீபாவளிப் பண்டிகையின் போது இந்து நண்பர்களின் இல்லங்களுக்கு வருகை புரிவது இயற்கையான ஒன்று. இது மலேசியாவில் உள்ள பல இன மக்களிடையே ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் வலுப்படுத்துவதாக உள்ளது. மலேசியா அரசாங்கம் தீபாவளியை இந்துக்களின் அதிகாரப்பூர்வப் பண்டிகையாக அங்கிகரித்து அன்றைய தினத்தைத் பொது விடுமுறை நாளாக அறிவிப்பும் செய்துள்ளது. 5.2: தைபூசம் . தைப்பூசம் என்பது உலகெல்லாம் கட்டிக்காக்கும் அன்னை பராசக்தி பரமசிவன் மைந்தன் ஸ்கந்தகு முருகப் பெருமானுக்கு கொண்டாடப் படும் விழாவாகும்.தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பர். தை பூசம் ஒவ்வொரு வருடத்திலும் தை மாதம் (தமிழ் பஞ்சாங்கப்படி பத்தாவது மாதம். இது பூஸா மாதம் என்றும் அறியப்படும்) பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகனுக்கு (சுப்பிரமணியன் அல்லது கார்த்திகேயன்) எடுக்கப்படும் விழாவாகும். நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். இவ்விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப் படுகிறது. தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, திருநீறு, உருத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபடுவர். தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்வர். உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம். மாலையில் கோயிலுக்குச் சென்று சிவ பூஜையில் பங்கேற்று சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்வர். மலேசியா நாட்டில், சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள பத்துமலைத் திருத்தலம், ஈப்போ கல்லுமலைத் திருக்கோவில் ஆகிய திருத்தலங்களில் தைப்பூசத் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. மலேசிய நாட்டில் தைப்பூசத்தை முன்னிட்டு சில மாநிலங்களுக்கு அரசாங்க விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 5.3: பொங்கல் திருநாள் · போகி பொங்கல் பண்டிகை நான்கு நாள் பண்டிகையாகும். மார்கழி கடைசி நாளன்று போகி கொண்டாடப்படுகிறது. அந்நாளில், பழையன கழித்து புதியன புகுத்தல் வழக்கம். மலேசிய நாட்டில் இந்தப் பண்டிகையை முன்னிட்டுப் பழையனவற்றை நீங்கும் வழக்கம் அனுசரிக்கப்படவில்லை. உண்மையில் தீய எண்ணங்களை மனதில் இருந்து நீக்க வேண்டும் என்பதுவே போகிப் பண்டிகை உணர்த்தும் தத்துவமாகும். · தைப்பொங்கல் தை மாத முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது. தைப்பொங்கல் தை 1 அன்று தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இவ்விழா சமயங்கள் கடந்து அனேக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக கொண்டாடப்படுகிறது · மாட்டுப் பொங்கல் மாட்டுப் பொங்கலன்று தொழுவத்தில் மாடுகள் உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே இந்நாளாகும். பொங்கலிட்ட பிறகு எச்சில் தண்ணீர் தெளித்தல் என்றொரு மரபு மதுரை மாவட்டத்தில் உண்டு. 'பொங்கலோ பொங்கல் மாட்டு பொங்கல் பட்டி பெருக பால் பானை பொங்க நோவும் பிணியும் தெருவோடு போக' என்று கூறி மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர். · காணும் பொங்கல் இந்நாளில் மக்கள் தங்கள் உற்றார் உறவினரைச் சென்று சந்தித்து தங்கள் அன்பையும் உணவுப் பண்டங்களையும் பகிர்ந்து கொள்வர். இது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காம் நாள் இடம்பெறும். இன்றைய தினம் திருமணமாகாத கன்னிப் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்வர். கன்னிப் பெண்கள் தங்களுக்கு ஏற்ற கணவன் அமைய வேண்டும் எனப் பிராத்திப்பதற்காக இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. 5.4: நிறைவு இந்துக்களின் பண்டிகைகள் யாவும் சமய நெறிகளை முன்னிருத்தியே அமையப்பெற்றுள்ளன. இறைவனுக்கு நன்றி செலுத்துதல் என்பதுமே இந்துக்களின் முதன்மைக் கோட்பாடு. அதே வேளை இது போன்ற பண்டிகைகள் யாவும் மனிதன் தீய குணங்களை விட்டொழித்து நல்லவற்றை யாவும் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்பதையே முக்கியக் கொள்கையாக வலியுருதின்றன. 6.0 : முடிவுரை இந்துக்கள் கொள்ள வேண்டிய தலையாய நான்கு இலக்குகளாக அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவை கருதப்படுகின்றன. அனைத்து உயிர்களும் இளமையில் பொருள், இன்பம் (உடல், உள்ளம், மற்றும் உணர்வு) ஆகியவற்றைத் தேடுதல் இயல்பு என்றும், மனம் முதிர்வடைந்தவுடன் இவற்றின் நெறிசார்ந்த தேடுதலை உயர்கட்டமைப்பான அறத்தின்கீழ் முறைப்படுத்துவரென்றும் கூறப்படுகிறது. இருந்தும், வாழ்வில் நிலையான யாவுங்கடந்த மகிழ்நிலையைத் தருவது வீடு, முக்தி, உய்வு, கடைத்தேற்றம் என்று பலவாறாக அழைக்கப்படும் பிறப்பு இறப்பற்ற விடுதலை நிலையேயெனக் கூறப்பட்டுள்ளது. சமயம் என்பது மானிட சமுதாயத்தை நல்வழியில் வாழ வழிகாட்டும் தன்மை உடையதாகும். உலமெல்லாம் ஒரே சமயம் என்ற நிலை இல்லாமல், இந்து சமயம், கிறித்துவ சமயம், இசுலாம் சமயம், பௌத்த சமயம், சமண சமயம் என்று பலவாறாக உள்ளன. எல்லா சமயத்திற்கும் அடிப்படையானது இறை நம்பிக்கை. "அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்....' என்ற திருமூலரின் கருத்தின் மூலம் "அன்பே சிவம்' என்கிற தாரக மந்திரமே சைவ சமயத்தின் ஆணிவேர். அதன்வழி நாம் அனைவரும் அன்பென்ற அமுதத்தை நம் இந்து சமயத்தின் மீது காட்ட வேண்டும். மலேசியா நாட்டில் இந்து சமயம் பல்வேறு தடைகளையும் போராட்டங்களையும் சந்தித்த போதும் இன்னமும் ன்]தனது தனித்துவத்தை இழக்காது செயல்பட்டே வருகின்றது. இந்து சமய மாணவர்களும், இளையோர்களும் இந்து சமயத்தைப் பற்றி ஆழ்ந்து அறிந்து கொள்வதில் முனைப்பு காட்டும் போக்கு தற்போது அதிகரித்துள்ளது. மேலும், தனி மனிதர்கள் பலரும் சமயம் சார்ந்த பட்டறைகள், சொற்பொழிவுகள், மாநாடுகள், கலந்துரையாடல்கள் போன்றவற்றை நடத்துவதற்கு ஆதரவுக் கரம் நீட்டி வருகின்றனர். இதன் மூலம் சமயத்திற்கும், சமுதாயதிற்கும் பெரு நன்மை செய்வர் என்பது உறுதி. எதிகாலம் பிரகாசமாக இருக்கும் என நம்பலாம். 7.௦ துணைநூற்பட்டியல் · http://www.tamilhindu.com/2013/02/th-book-stall-at-hindu-fair/ · http://hindusamayams.forumta.net/f13-forum#axzz3IQKGm5TQ · http://www.thinakaran.lk/2010/06/18/_art.asp?fn=f1006181 · http://tamilsnow.com/?p=3166 · http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D 11