http://pothu-malar.blogspot.com/2011/02/blog-post_553.html இலக்கணம் முதன்மைக் கட்டுரை: தமிழ் இலக்கணம் இலக்கண அடிப்படையில் தமிழ் ஒரு ஒட்டுநிலை மொழியாகும். தமிழில், பெயர் வகை, எண், வேற்றுமை, காலம், போன்றவற்றை விளக்கச் சொற்களுடன் பின்னொட்டுக்கள் சேர்க்கப்படுகின்றன. தமிழின் பொதுவான கருவி மொழியியல் (metalinguistic) சொற்களும் கலைச் சொற்களும் தமிழாகவே உள்ளன. தமிழ் இலக்கணம் பெருவாரியாக தொல்காப்பியத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. தற்கால தமிழ் இலக்கணம் பெரும்பாலும் நன்னூலைத் தழுவியமைந்துள்ளது. பதிமூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நன்னூலில் தொல்காப்பிய நெறிமுறைகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. தமிழ்ச் சொற்கள் வேர்ச் சொற்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றுக்கு ஒன்று அல்லது பல ஒட்டுக்களைச் சேர்ப்பதன் மூலம் புதிய சொற்கள் உருவாக்கப்படுகின்றன. இம் மொழியில் பெரும்பாலான ஒட்டுக்கள் பின்னொட்டுக்களாகும். பின்னொட்டுக்கள் சொற்களின் இலக்கண வகையில் மாற்றங்களை உண்டாக்குகின்றன அல்லது அவற்றில் பொருளை மாற்றுகின்றன. இவை சொற்களுக்கு இடம், எண், பால், காலம் போன்றவற்றை உணர்த்தும் பொருள்களையும் கொடுக்கின்றன. இவ்வாறு சொற்களுக்கு ஒட்டுக்களைச் சேர்ப்பதில் எவ்வித எண்ணிக்கைக் கட்டுப்பாடும் கிடையாது. இதனால் தமிழில் பல ஒட்டுக்களைக் கொண்ட நீளமான சொற்கள் இருப்பதைக் காணலாம். தமிழில் பெயர்ச் சொற்கள் இரண்டு திணைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை உயர்திணை, அஃறிணை என்பவை. உயர்திணை கடவுளர், மனிதர் என்பவர்களைக் குறிக்கும் சொற்களை உள்ளடக்குகின்றன. ஏனைய உயிரினங்களையும், பொருட்களையும் குறிக்கும் சொற்கள் அஃறிணைக்குள் அடங்குகின்றன. உயர்திணை ஆண்பால், பெண்பால், பலர்பால் என மூன்று பால்களாகவும், அஃறிணை ஒன்றன்பால், பலவின் பால் என இரண்டு பால்களாகவும் வகுக்கப்பட்டுள்ளன. உயர்திணையுள் அடங்கும் ஆண்பால், பெண்பால் என்பன ஒருமைப் பொருளைச் சுட்டுகின்றன. பலர்பால் பன்மைப் பொருளைச் சுட்டுவது மட்டுமன்றி மதிப்புக் கொடுப்பதற்காக ஒருமையாகவும் பயன்படுவதுண்டு. தமிழில் வேற்றுமைகள் எட்டுவகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை முதலாம் வேற்றுமை, இரண்டாம் வேற்றுமை, மூன்றாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை, ஐந்தாம் வேற்றுமை, ஆறாம் வேற்றுமை, ஏழாம் வேற்றுமை, எட்டாம் வேற்றுமை எனப் பெயரிடப்பட்டு உள்ளன. இப் பகுப்பு சமஸ்கிருத இலக்கண அடிப்படையிலானது என்றும் இதனால் செயற்கையானது என்றும் தற்கால மொழியியலாளர் சிலர் கூறுகின்றனர். சொல் வளம் பார்க்கவும்: விக்சனரியில் உள்ள தமிழ் சொற்களின் பட்டியல் மற்றும் தமிழ் மொழியிலிருந்து உருவான சொற்களின் பட்டியல் தமிழ் சொல் வளம் நிறைந்த மொழி. நவீனத் தமிழ்மொழி பழந்தமிழ் மொழியில் பயன்படுத்தப்பட்ட பெரும்பாலான சொற்களை இன்னும் பயன்படுத்துகின்றது. இதனால் சற்று பயிற்சியுடன் பழந்தமிழ் இலக்கியங்களை ஒரு தமிழர் படித்து அறிய முடியும். திருக்குறள் போன்ற சிறந்த பழந்தமிழ் படைப்புகள் தமிழர்களால் சிறப்பாக கற்கப்படுவதற்கு இத்தொடர்ச்சியான சொற்பயன்பாடு உதவுகின்றது. சமஸ்கிருத சொற்கள் தொல்காப்பியர் காலம் முதலே தமிழ் மொழியில் உள்வாங்கப்பட்டு தகுந்த பல தளங்களில் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. சமயம் சார்பான சமஸ்கிருத சொற்பயன்பாடுகள் தமிழில் அதிகம் காணப்படுகின்றன. சமஸ்கிருத உச்சரிப்புக்களைத் தமிழில் உள்வாங்குவதற்கு கிரந்த எழுத்துக்கள் பயன்படுகின்றன. தமிழின் நீண்ட வரலாற்றில் பல பிறமொழிச்சொற்கள் தமிழில் கலந்து, தமிழ்படுத்தப்பட்டு தமிழை வளமாக்கியுள்ளன. பாரசிக, அரபு போன்ற செம்மொழிகளில் இருந்தும், பிற திராவிட மொழிகளில் இருந்தும், போர்த்துகீசிய, டச்சு, பிரேஞ்சு போன்ற காலனித்துவ மொழிகளில் இருந்தும், இந்தி, சிங்களம், மலாய் போன்ற தமிழருடன் தொடர்புடைய பிற இனங்களின் மொழிகளில் இருந்த்தும், ஆங்கில மொழியில் இருந்தும் தமிழ் மொழிக்கு பல சொற்கள் வந்தடைந்துள்ளன. பிறமொழிச் சொற்கள் மட்டுப்படுத்தப்பட்டில் இருப்பது தமிழ் மொழியின் தொடர்ச்சிக்கும் தனித்துவத்துக்கும் அவசியம். ஆகையால் பிற மொழிச்சொற்களுக்கு இணையான தமிழ் மொழியின் அடிச்சொற்களில் இருந்து உருவாக்கப்படும் சொற்களை பயன்படுத்துவதே நன்று என்பது பல எளிய தமிழ் ஆதரவாளர்களின் கருத்து. இக்காலத்தில் குறிப்பாக ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் அடிச்சொற்களில் இருந்து உருவாக்கப்பட்ட சொற்கள் பயன்படுத்தப்படவேண்டும் என்பது பல தமிழ் ஆர்வலர்களின் வேண்டுகோளாக அமைகின்றது. கலைச்சொற்கள் தமிழ் மொழியில் அறிவியலை படைக்க கலைச்சொல்லாக்கம் இன்றியமையாததாகும். இது தமிழ் மொழியில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் ஒரு செயல்பாடுதான். இக்காலத்தில் தமிழக இலங்கை அரசுகளின் பல்கலைக்கழகங்கள் ஊடாகவும் தமிழ்த் தன்னார்வலர்களாலும் இப்பணி தொடர்கின்றது.